பாஜ அரசைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாஜ அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, விழுப்புரம் மற்றும் கோட்டக்குப்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர்கள் பொன்னிவளவன், மலைச்சாமி தலைமை வகித்தனர். விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் சிறப்புரையாற்றினார். தொகுதிச் செயலர் பாவண்ணன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து மாலையில் விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர்கள் பெரியார், விடுதலைச்செல்வன் தலைமை லவகித்தனர். மாவட்டச் செயலர்கள் பொன்னிவளவன், திலீபன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். காட்டுமன்னார்கோயில் தொகுதி எம்.எல்.ஏ. சிந்தனைசெல்வன் சிறப்புரையாற்றினார்.
கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் நாவரசு, நகரச் செயலர் சரவணன், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக துணைச்செயலர் இளந்திரையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் சௌரிராஜன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் அஸ்கர்அலி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உரையாற்றினர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நிறைவில் நகரச் செயலர் இரணியன் நன்றி கூறினார்.