வீரராகவ பெருமாள் கோவில் தைப்பிரம்மோற்சவ தேர் திருவிழா
தேரோட்டம்
திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் தை மாதம் பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலையும் பல்வேறு வாகனத்தில் சிறப்பு கோலங்களில் உற்சவரை அலங்காரம் செய்து முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனையடுத்து பிரம்மோச்சுவத்தின் முக்கிய நாளான 7ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
இந்த தேரோட்டத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். 60 அடி உயரமும் 21 அகலமும் கொண்ட இத்தேரானது வண்ண மலர்கள் மற்றும் பட்டு துணிகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப்பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த தேரில் வீரராகப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நகரின் முக்கிய மாட வீதிகளான குளக்கரை தெரு, பஜார் வீதி, வடக்கு ராஜா வீதி, மோதிலால் தெரு வழியாக தேரோட்டம் நடைபெற்றது .
பக்தர்கள் மிளகு உப்பு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது செலுத்தி தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு மனதளவில் வேதனை அடைந்து வருகின்றனர். தேரை வடம் பிடித்து கைகளால் இழுத்து வர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.