தஞ்சை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

தஞ்சை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

பைல் படம் 

கொளுத்தும் வெயில் எதிரொலியாக தஞ்சை உழவர் சந்தைக்கு வரத்துக் குறைவால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்தது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி, பள்ளியக்ரஹாரம், மருங்குளம், குருங்குளம், ஈச்சங்கோட்டை, கண்டிதம்பட்டு, வேங்கராயன் குடிக்காடு, கொல்லாங்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தோட்ட சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இங்கு அன்றாடம் புதிதாக கிடைக்கும் காய்கறிகளை தஞ்சை நகரில் பல்வேறு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வந்து வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர். கொளுத்தும் வெயிலால் வரத்து குறைவு கடந்த சில வாரங்களாக விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக சந்தைக்கு தினசரி 18 டன்னுக்கு குறைவில்லாமல் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

நேற்று 15 டன் மட்டுமே விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதனால் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட நேற்று உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. ஒருகிலோ ரூ.82-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் நேற்று ஒரு கிலோ ரூ.140 - க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதாக விலையும் கணிசமாக உயர்ந்து காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

கடந்த வாரம் கிலோ ரூ.28-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் நேற்று ரூ..34 ஆகவும், ரூ.32- க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் 40-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட அவரைக்காய் 86-க்கும், ரூ.28-க்கு விற்கப்பட்ட புடலங்காய் 40-க்கும், ரூ.32-க்கு விற்கப்பட்ட பாகற்காய் 46-க்கும், ரூ.28- க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் 44-க்கும், ரூ.34-க்கு விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம் 50-க்கும், ரூ.22-க்கு விற்கப்பட்ட தக்காளி 28-க்கும் விற்கப்பட்டது.

ஒரு கிலோ ரூ.82-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் 140-க்கும், ரூ.38-க்கு விற்கப்பட்ட பீட்ரூட் 46-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட கேரட் 90-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் 56-க்கும், ரூ. 28-க்கு விற்கப்பட்ட முள்ளங்கி 40-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட கொத்தவரங்காய் 40-க்கும் ரூ.30-க்கு விற்கப்பட்ட முட்டைக்கோஸ் 48-க்கும், ரூ.24-க்கு விற்கப்பட்ட சவ்சவ் 40-க்கும் நேற்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. குறைந்த அளவில் வாங்கி சென்றனர் காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தாங்கள் வழக்கமாக வாங்கும் அளவில் இருந்து மிகக் குறைந்த அளவிலேயே காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

Tags

Next Story