வெள்ளையத்தேவன் 255 ஆவது பிறந்த நாள் விழா
வல்லநாட்டில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் 255 ஆவது பிறந்த நாள் விழாவினை தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தீரம் மிக்க வீரன் வெள்ளையத் தேவனை வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தளபதியாக மட்டுமல்லாமல் மகனாகவும் நினைத்துப் போற்றினார். வெள்ளையர்கள் வீரபாண்டியரிடம் கப்பம் கேட்டு வந்தபோது முதலில் சீறிப் பாய்ந்தது வெள்ளையத்தேவன்தான். பானர்மேன் என்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு படையெடுத்து வந்தான். போர் தொடங்கியது. வெள்ளையத்தேவன் சுழன்று சுழன்று ஆங்கிலேயர்களை வேட்டையாடிக் கொன்றான். கோட்டையை பலமாக காவல் காத்தான்.
இவனது வீர ஆவேசத் தாக்குதலைக் கண்ட தளபதி பானர்மேன் போர் முடிவதாக அறிவித்துவிட்டுப் பாசறைக்கு திரும்பினர். போர் முடிந்து விட்டது என்று நினைத்து கோட்டையின் மீது நின்று தன் படைகளுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்த வெள்ளையத் தேவனை ஒரு ஆங்கிலச் சிப்பாய் போரின் நெறிமுறைகளுக்கு மாறாகச் சுட்டுவிட்டான். இதைச் சற்றும் எதிர்பாராத வெள்ளையத் தேவன் கோட்டையிலிருந்து விழுந்து மடிந்தான். வெள்ளையத் தேவனைச் சுட்டுக்கொன்றவனை அவரது மனைவி வெள்ளையம்மாள் குத்திக் கொன்றுவிட்டு வெள்ளைத் தேவனின் சாவுக்குப் பழி தீர்த்துக் கொண்டாள்.
சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் வீரத்தினை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு வல்லநாட்டில் ழுழுஉருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த நாளான மே 31ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற 255ஆவது பிறந்தநாள் விழாவில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் வீரன் வெள்ளையத்தேவன் வாரிசுதாரர்கள் சி.ஆறுமுகம், ஏ.மாரிமுத்து ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.