காற்று மாசு இல்லா போகி கொண்டாட ஆட்சியர் அறிவுறுத்தல்
மாவட்ட ஆட்சியர்
வேலூர் மாவட்டத்தில் போகி பண்டிகையின் போது ரப்பர்,பழைய விறகுகள் மற்றும் செயற்கைப் பொருட்களை எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் முதல் நாள் நாம் போகிப் பண்டிகையை கொண்டாடுகிறோம் .
இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பது என்பது பழையன கழிதல் என்ற வழக்கிற்கான அடையாளமாகும். இந்நாளில் கிழிந்த பாய்கள், துணிகள்,தேய்ந்த துடைப்பான்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள் பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமை ஏற்படுத்தாத ஒன்றாகும்.
ஆனால் தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்கும்போது நச்சுப் புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் ,நுரையீரல், கண்மற்றும் மூக்கு எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கருப்பு புகையினால் காற்று மாசுபட்டு நம் நகரம் கருப்பு நகரமாக மாறுகிறது.நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்திற்கு தடை ஏற்படுகிறது. இது போன்ற செயல்கள் மூலம் காற்று மாசுபடுவது சட்டப்படி குற்றமாகும். ரப்பர்,பழைய விறகுகள் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் போகிப் பண்டிகை இனிய ஆரம்பமாக இருக்கட்டும்.அன்றைய தினம் குப்பையை முறைப்படி நகர திடக்கழிவுடன் சேர்த்து அப்புறப்படுத்தி பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் காற்று மாசு இல்லாமல் கொண்டாடுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.