படைவீரர் கொடிநாள் நிதி வசூல் - ஆட்சியர் துவக்கி வைப்பு
கொடிநாள் நிதி வசூலினை துவக்கி வைத்த ஆட்சியர்
. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் உண்டியலில் செலுத்தி கொடிநாள் நிதி வசூலினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற தேநீர் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: நமது இந்திய தாய் திருநாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் வீட்டை மறந்து, மனைவி மக்களை மறந்து, 24 மணிநேரமும் நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லைப் பகுதிகளில் அரண்போல் நின்று பாதுகாத்து செயல்பட்டு வரும் முப்படைவீரர்களின் தியாகத்தினை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 7 ஆம் நாளன்று படைவீரர் கொடிநாள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் நலனை காப்பதுடன் இந்திய முப்படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர்களின் பல்வேறு கோரிக்கை தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் இவ்வாண்டில் 119 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் இந்நிகழ்வில் தெரிவிக்க விரும்புகிறேன்.
இம்மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் 6798ம் மற்றும் கைம்பெண்கள் 5214 நபர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இம்மாவட்டத்தில் சுமார் 606 முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளனர். இவர்களில் கடந்த ஆண்டில் மட்டும் 06 முன்னாள் படைவீரர்கள் பல்வேறு அரசு நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளார்கள்.
அனைவருக்கும் மறு வேலைவாய்ப்பு அரசால் வழங்கிட இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு நீங்கள் சுயதொழில் துவங்கிட அரசு அறிவித்துள்ள பல்வேறு கடனுதவி திட்டங்களை பெற்று பயனடையவும் கேட்டுக்கொள்கிறேன். இன்று திருவண்ணாமலை நகரிலும் மற்றும் நமது மாவட்டத்தின் மற்ற வட்டங்களின் தலைநகர்களிலும் கொடிநாள் அனுசரிப்பு சிறப்பான முறையில் நடத்தப்பட்டு, கொடிநாள் நன்கொடை வசூல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் நீத்த படைவீரர்களின் குடும்பத்தினர், போரில் ஊனமுற்ற படைவீரர்கள், படையிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் ஆகியோர்களின் மறுவாழ்வுக்காக பல்வேறு வகை நிதியுதவிகள் வழங்கும் பொருட்டு அதற்கான நிதி ஆதாரத்திற்காகவே ஆண்டுதோறும் கொடிநாள் நிதி திரட்டப்பட்டு முன்னாள் படைவீரர் நலத்துறை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் சிறார்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகள் அரசால் செயல்படுத்தப்படுகிறது. உதாரணமாக உயர் கல்வி, பட்டயப்படிப்புகள், பொறியியல் கல்வி போன்றவைகளுக்கு இட ஒதுக்கீடு. கல்வி நிதியுதவிகள், முன்னாள் படைவீரர்களுக்கு வட்டி மானியத் திட்டத்தின்கீழ் கடனுதவி, சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவிகள் போன்றவைகளை நீங்கள் அனைவரும் அறிந்து அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.கடந்த 2022-ஆம் ஆண்டுக்கு நமது மாவட்டத்திற்கு படைவீரர் கொடிநாள் வசூல் குறியீடாக ரூ.74,20,000/- (ரூபாய் எழுபத்து நான்கு லட்சத்து இருபதாயிரம் மட்டும்) அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சியின் விளைவாக 2022- படைவீரர் கொடிநாள் வசூலாக இதுவரை ரூ.81,78,000/- (ரூபாய் எண்பத்தொரு இலட்சத்து எழுபத்தெட்டாயிரம் மட்டும்) 110.21% வசூல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தற்போது 2023-ஆம் ஆண்டிற்கு இம்மாவட்டத்திற்கு கொடிநாள் வசூல் இலக்காக ரூ. 85,86,900/- இலட்சமாக வசூல் செய்திட அரசால் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனைக் காட்டிலும் கூடுதலாக வசூல் செய்வோம் என்ற நம்பிக்கையினை எடுத்துரைப்பதுடன் இம்மாவட்டத்திலுள்ள அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்கிட கேட்டுக்கொள்கிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர் இராணுவ அதிகாரிகள் தங்குவதற்கும், படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தினர்கள் பயனடையும் வகையிலும் ரூ.3,03,00,000/- (மூன்று கோடி மூன்று இலட்சம்) மதிப்பிலான ஜவான்ஸ்பவன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் படைவீரர்கள் பயன்பெறும் வகையில் புதியதாக வீடு கட்டும் போது ஒரு இலட்சம் முன்பண மானியமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருமண நிதியுதவி, கல்வி நிதியுதவி, கண் கண்ணாடி நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, போர் விதவையர்களுக்கு வருடாந்திர பராமரிப்பு மானியம் ஏனைய நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. போர் விதவையரின் ஒரு மகளுக்கு திருமண நிதியுதவி ஒரு இலட்சம் பண முடிப்புடன், 08 கிராம் கொண்ட தங்க நாணயம் வழங்கப்படுகிறது. படைப்பணியின் போது படைவீரர்கள் இறக்கும் நேர்வில் குடும்பத்தில் ஒரு நபருக்கு அரசு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
இதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர் குடும்பங்களுக்கு கல்வி நிதியுதவித்தொகையாக 12 நபர்களுக்கு ரூ.2 இலட்சத்து 41 ஆயிரம், திருமண நிதியுதவியாக 3 நபர்களுக்கு ரூ. 75 ஆயிரம் என மொத்தம் ரூ. 3 இலட்சத்தி 16 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் முன்னாள் படைவீரர்கள் தேநீர் விருந்தில் தானிப்பாடி புதிய காலணியை சேர்ந்த ஆர்.வீரமணி வி.வனித்தா மகன் செல்வன். வி.சபரிவாசன் கொடிநாள் நிதிக்காக தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி (ஓய்வு) டி.கிருபாநிதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ஸ்குவாட்ரன் லீடர் அ.வெ.சுரேஷ் நாராயணன், வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.