வீட்டின் உள்ளே உணவு பொருட்களை தேடிய யானையின் வீடியோ வைரல்!
கோவை அருகே வீட்டின் உள்ளே உணவு பொருட்களை தேடிய யானையின் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில் வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வனத்துறையினர் வாகனங்கள் மூலம் தொட்டிகளில் தன்ணீர் நிரப்பி வருகின்றனர்.
வன விலங்குகளுக்கு தேவையான உணவுகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகிறது.குறிப்பாக யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகிறது. கோவை வனக்கோட்டம் மதுக்கரை பகுதியில் ஏராளமான யானைகள் உள்ள நிலையில் அங்கிருந்து இடம் பெயர்ந்து கோவை வனச்சரகத்திற்குள் வந்துள்ள யானைகள் தற்போது தடாகம் மற்றும் காளையனூர், பெரியதடாகம் பகுதிகளில் சுற்றி வருகின்றன.
இந்நிலையில் தடாகம் சோமையனூர் அருகே உள்ள மடத்தூர் கிராமத்திற்குள் நேற்று இரவு புகுந்த யானை தோட்டத்திற்குள் புகுந்து மா மரத்தில் இருந்த மாங்காய்களை பறிக்க முயன்ற பின்னர் அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி கார்த்திக் கேசவமணி என்பவரது வீட்டின் முன்பு வந்து உணவு பொருட்களை தேடியது.சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போது வாசலில் யானை நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டதை அடுத்து யானை அங்கிருந்து நகர்ந்தது.இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.
தற்போது இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.இந்த யானை அண்மையில் வனப்பகுதியில் இருந்து வழி தவறி ஊருக்குள் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.