வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 15-ம் ஆண்டு விழா
செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 15-ம் ஆண்டு விழா, வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமையில், நேற்று நடந்தது. சென்னை சங்கரா நேத்ராலயா தலைவர் கிரிஷ் சிவ ராவ் பங்கேற்றார். அதன்பின் அவர் பேசியதாவது: பெண்களுக்கு கல்வி கண் போன்றது. அது பெண்களுக்கு முழுமையான வாழ்க்கையை தருவதோடு, தன்னம்பிக்கையையும், சுயமதிப்பையும் அளிக்கிறது. எதை சாதிக்க நினைக்கிறோமோ, அதை கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும்.
தன் தாய், தந்தை, ஆசிரியபெருமக்கள், தான் கற்ற கல்லுாரிக்கும் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். அதன்பின், பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த, முதுகலை வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவி சந்தான பாரதிக்கு பட்டம் மற்றும் பதக்கம் வழங்கியும், 650 மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார். பட்டம் பெற்ற மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், கல்வி குழுமத்தின் துணை தலைவர் சுரேஷ் கன்காரியா, கல்லுாரி முதல்வர் அருணாதேவி உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.