விஜயேந்திர சுவாமிகள் 20ம் தேதி காஞ்சிபுரம் வருகை

விஜயேந்திர சுவாமிகள் 20ம் தேதி காஞ்சிபுரம் வருகை

பைல் படம்

விஜயேந்திர சுவாமிகள் காஞ்சி வருகையை முன்னிட்டு விஜய யாத்திரை வரவேற்பு விழா நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நாளை மறுதினம், காஞ்சிபுரத்திற்கு வரும், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, விஜய யாத்திரை வரவேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இதுகுறித்து சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியதாவது: காஞ்சிபுரம் காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 2022 மார்ச் மாதம் விஜய யாத்திரை புறப்பட்டு, ராமேஸ்வரம், ஆந்திரா, தெலங்கானா, காசி, உத்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு விஜயம் செய்தார். அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்று அருளாசி வழங்கினார்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் ஜோதிர்லிங்க க்ஷேத்திரமான மல்லிகார்ச்சுன சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார். திருப்பதியில், சந்திர மவுலீஸ்வர பூஜை செய்து கொண்டு, அதன் தொடர்ச்சியாக விஜய யாத்திரை புரிந்து, வரும் 20ல் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வருகிறார்.

சுவாமிகளுக்கு காஞ்சி சங்கர மடம், பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சார்பில் விஜய யாத்திரை வரவேற்பு விழா, நாளை மறுதினம், பெரிய காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் அருகில், மாலை 5:00 மணியளவில் நடைபெற உள்ளது. அப்போது, பல்வேறு திருக்கோவில்களில் பிரசாதங்களுடன் பூரண கும்ப மரியாதை, மங்கல வாத்தியங்கள் முழங்க, ஸ்ரீபெரியவர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பும், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பெரியவர்கள் நகர பவனி ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து சங்கர மடத்தில், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளுரையும், பிரசாதமும் வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.


Tags

Next Story