விக்கிரவாண்டி : திமுக மீது பாமகவினர் புகார்

விக்கிரவாண்டி :   திமுக மீது பாமகவினர் புகார்

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பாமக மனு 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற தொகுதியில் தங்கி தேர்தல் பணியாற்றும் 9 அமைச்சர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பா.ம.க., சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பா.ம.க., சமூக நீதி ஊடக பேரவை தலைவர் பாலு, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தாசில்தார் யுவராஜிடம் மனு அளித்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணியில் ஆளுங்கட்சியின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது.தேர்தலை நியாயமாக நேர்மையாக ஜனநாயக முறைப்படி நடத்த முடியாத சூழ்நிலையில் தி.மு.க.,வின் செயல்பாடு அமைந்துள்ளது.9 அமைச்சர்களை களத்தில் இறக்கி பல்வேறு பகுதிகளில் பிரித்து தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.தேர்தல் முடியும் வரை அவர்கள் தொகுதியில் தங்கி இருந்து தேர்தல் பணியாற்றுவார்கள் என அக்கட்சி இணையதளத்தில் அதிகாரப்பூர்வமான வெளியிட்டுள்ளனர்.

அடுத்து வரும் 25 நாட்களுக்கு தொகுதியில் தங்கியிருந்து அவர்கள் தேர்தல் பணியாற்றினால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்படும்.அமைச்சர்கள் தொகுதியில் தங்கியிருந்து முகாம் அலுவலகத்தை அமைத்து அரசு அதிகாரிகள் படை பலத்துடன் இங்கே தங்கி வாக்காளர்களை சந்திப்பதும், தேர்தல் பணியாற்றுவதும் ஒரு நியாயமான தேர்தல் முறையாக இருக்காது.காணை ஒன்றியம், கோழிப்பட்டு ஊராட்சியை 20 லட்சம் ரூபாய்க்கு, கோவில் கட்ட நிதியுதவி வழங்க தி.மு.க.,வினரால் ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

அதேபோன்று பனையபுரம் ஊராட்சி தலைவரை அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். உங்களுக்கு வழங்கப்படுகின்ற அரசு நிதிகளை தடுப்போம் என கூறுகின்றனர்.எனவே, அதன் அடிப்படையில் 9 அமைச்சர்களையும் தொகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தேர்தல் ஆணையம் அமைச்சர்கள் தங்கி பணியாற்றுவதை அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து தொகுதி தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்து மனு அளித்துள்ளோம். மேலும், இந்திய தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பியுள்ளோம். இவ்வாறு வழக்கறிஞர் பாலு கூறினார்.

மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட அமைப்புச் செயலாளர் பழனிவேல், நகர செயலாளர் சங்கர், பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story