விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
பணிகள் தீவிரம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும். 24-ந்தேதியன்று வேட்பு மனுக் கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 26-ந்தேதி (புதன்கிழமை) மாலைக்குள் வேட்பு மனுவை திரும்பப்பெறலாம். இத்தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய வேட்பு மனுவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இதையொட்டி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அங்குள்ள தனி அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அமருவதற்கான இருக்கைகள் மற்றும் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அவர்களுடைய வேட்பு மனுவை முன்மொழிய வருகை தருபவர்கள் அமருவதற்கான இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் மற்றும் அவருடன் வருபவர்கள் தேர்தல் விதிகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் தாலுகா அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.