லஞ்ச வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை

லஞ்ச வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை

ரவிக்குமார்

திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.4000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, கடந்த 2011-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் தனது தாயாரின் மறைவிற்கு பிறகு, தாயார் எழுதி வைத்த உயிலின்படி, தாயார் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு பட்டாபெயர் மாற்றம் செய்யக்கோரி விண்ணப்பம் செய்துள்ளார். அப்போது திருபுவனம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த ரவி (எ) ரவிக்குமார் (வயது69/2024) கோவிந்தபுரம் கிராம நிர்வாக அலுவலராகவும் கூடுதலாக பொறுப்பு வகித்து வந்தார். பார்த்தசாரதியின் மனுவின்பேரில் பட்டா பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்ய ரூ.4000/- லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத பார்த்தசாரதி தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமாரை லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த முதன்மை குற்றவியல் நீதிபதி சண்முகப்பிரியா நேற்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமாருக்கு ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 7-ன் கீழ் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000/- அபராதமும் மற்றும் பிரிவு 13(1)(d) r/w 13(2)-ன் கீழ் இரண்டு வருட கடுங்காவல் தண்டனையும் ரூ.2000/- அபராதமும் விதித்தார். அபராதங்களை கட்டத்தவறும் பட்சத்தில் மேலும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும், சிறைதண்டணையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பாக காவல் துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால் மேற்பார்வையில், அரசு கூடுதல் வழக்கறிஞர்முகம்மது இஸ்மாயில், காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் வழக்கை திறம்பட நடத்தி குற்றவாளிக்கு சிறைத் தண்டனை பெற்றுத்தந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story