கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
விழுப்புரத்தில் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
இதற்கு மாநில துணைத்தலைவர் ஆதி.லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் கிருஷ்ணன், பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ரவி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்கப்பட்டு வந்ததை நிறுத்தி வைத்துள்ளதை மீண்டும் வழங்க வேண்டும், அரசு அட்டவணை டி பிரிவில் கிராம உதவியாளர் களை சேர்க்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், கிராம உதவியாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்குவதில் 20 சதவீதம் என்று இருப்பதை 30 சதவீதமாக உயர்த்த வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்தால் பதவி உயர்வு என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட இணை செயலாளர்கள் ரமேஷ், விநாயகமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, துரைசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரவி நன்றி கூறினார்.