குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் , வயலபாடி ஊராட்சிக்கு உள்பட்ட வ.கீரனூர் கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வயலப்பாடி ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், அவதிப்பட்டு பொதுமக்கள் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்து அரியலூர்- அகரம் சீகூர் சாலையில் 50க்கும் மேற்பட்டோர் கிராம பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த வேப்பூர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், மற்றும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.விரைவில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.