மானாமதுரை அருகே தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 10 கிராம மக்கள் லோக்சபா தேர்தலை முழுமையாக புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாக்குளம் பகுதியில் பீக்க்குளம், முத்துராமலிங்கபுரம், கள்ளிசேரி, சேத்தனேந்தல், பெருங்கரை, கீழ மாயாளி, மேல மாயாளி, கீழப்பிடாவூர், வேளாணி, மேல பெருங்கரை ஆகிய கிராமங்கள் காளையார் கோவில் யூனியனில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மானாமதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய் மற்றும் பல்வேறு அலுவலகப் பணிகளுக்கு இங்கிருந்து 3 பஸ்கள் மாறி 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காளையார் கோவில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோன்று எம்.எல்.ஏ.,வை சந்திக்க வேண்டுமென்றாலும் 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மேற்கண்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாகவும் மானாமதுரை சட்டமன்ற தொகுதியிலும் இணைக்க வேண்டுமென்று நீண்ட காலமாக போராடி வருகின்றனர். மேலும் கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் போன்ற தேர்தல்களை புறக்கணிக்க போவதாக அறிவித்ததும், அப்போதைய அதிகாரிகள் கிராம மக்களை உடனடியாக சந்தித்து உங்களது கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் வாக்குகளை செலுத்தினர்.
இந்நிலையில் 15 வருடங்களுக்கும் மேலாக இக்கோரிக்கையை விடுத்து வருகிற நிலையில் தற்போது வரை நிறைவேற்றப்படாததால்ல் வருகின்ற லோக்சபா தேர்தலை கிராம மக்கள் முழுமையாக புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.