மின்வாரிய அதிகாரிகள் மீது கிராம மக்கள் புகார்
மனு அளிக்க வந்த கிராம மக்கள்
வீடுகளின் மின் கட்டணம் தொடர்பாக மின்துறை அலுவலர்கள் மீது கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.மனு விபரம்: கள்ளக்குறிச்சி அடுத்த தியாகை மற்றும் சிறுவல் கிராமத்தில் 30 வீடுகளின் மின் இணைப்பில், கடந்த 8 மாதங்களாக மின் கணக்கீட்டாளர், கணக்கீடு செய்யவில்லை. நாங்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது உங்களுக்கு மின் கட்டணம் இல்லை என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது புதியதாக வந்த கணக்கீட்டாளர் 500 யூனிட் முதல் 4,000 யூனிட் வரை கணக்கீடு செய்து, 5,000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டும் தெரிவித்துள்ளார். அலுவலகம் சென்று கேட்டபோது மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று உதவி மின் பொறியாளர் கூறுகிறார். மின்வாரிய அதிகாரிகள் செய்த தவறுக்கு, விவசாய கூலி தொழிலாளர்கள் நாங்கள் என்ன செய்ய முடியும். இவ்வளவு மின் கட்டண தொகையை எங்களால் கட்ட இயலாது. மின் கட்டணம் செலுத்தவில்லை என கடந்த 27ம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால், வீடுகளில் மின் இணைப்பு இன்றி பள்ளிக்கு செல்லும் தங்களது பிள்ளைகள் உட்பட அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். தற்போது தேர்வு நடைபெறும் சூழலில் தங்களின் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முறையாக கணக்கீடு செய்யாத மின் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.