ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் புகார்

உறவினர்கள் மற்றும் கிராம மக்களை நம்ப வைத்து நகை மற்றும் பணம் என பல கோடி மோசடி செய்த நபர் மீது மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரவை கிராமத்தை சேர்ந்தவர் சங்கு நாதன். இவர் ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். உத்தரவை கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடையே முக்கியமாக பெண்களிடம் வீடு கட்டுவதற்காகவும், வைத்திய செலவிற்காகவும், கடன் கொடுக்க வேண்டும் என பல வழிகளில் சுமார் 200 பவுனுக்கு மேல் வாங்கி இருக்கிறார். முதலில் ஐந்து பவுன் பெற்றுக் கொண்டு ஒரு மாதத்தில் திருப்பிக் கொடுக்கும் பொழுது சேர்த்து சுமார் 50,000 ரொக்கப் பணம் கொடுத்திருக்கிறார். மீண்டும் ஒரு மாதம் கழித்து கூடுதலாக நகை கேட்டு இருக்கிறார். நகைக்கு அதிக பணம் கிடைக்கிறது என நம்பிய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கேட்ட நகையை அவருக்கு கொடுத்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் சிலரிடம் 10 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை ரொக்க பணமாக 2 கோடி வரை கடனாக பெற்று இருக்கிறார். கடந்த சில மாதங்களாக நகையும் திருப்பிக் கொடுக்கவில்லை பணத்தையும் தரவில்லை. சங்கு நாதனிடம் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கேட்டதற்கு சில நாட்களில் தருவதாகவும்,பணம் வாங்கியவர்களிடம் எனது சொந்த வீட்டை தருகிறேன் என எழுதிக் கொடுத்திருக்கிறார். உறவினர்கள் சென்று ஆய்வு செய்தபோது அதுவும் உண்மை இல்லை என தெரிய வந்த நிலையில் நாங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளோம் என்று தெரிந்த பிறகு தற்போது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று பணம் நகையை மீட்டு தர வேண்டுமென அவர் மீது புகார் கொடுத்துள்ளனர்.

தற்போது சங்கு நாதன் தலைமறைவாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே அவரை கண்டுபிடித்து பணம் நகையை மீட்டு தர வேண்டும் எனவும் அவரின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் எனவும் புகார் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மாவட்ட கண்காணிப்பாளரும் இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story