திருமயம் அருகே தார் சாலை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
சேதமடைந்த சாலை
திருமயம் தாலுகாவை சேர்ந்த கல்லூரில் நான்காயிரம் பேர் வாசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அதிக அளவில் கரும்பு, நெல், வாழை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. அரிசி ஆலைகள் உள்ளன. இதன் மூலம் 500 பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். கல்லூரில் இருந்து பள்ளத்தூருக்கு 6 கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையில் பேப்பர் மில்லில் இருந்து நெல் குடோன், உரக்கிடங்கு வழியாக பள்ளத்தூர் மருத்துவமனை வரை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சாலை பள்ளங்களில் மழை நீர் தேங்கி சேறும், சகதியும் ஆக மாறிவிட்டது.
இதனால் சாலையை பயன்படுத்தி வரும் இருசக்கர மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரி மாணவிகள் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரிமளம் ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் மற்றும் கிராம மக்கள் சார்பில் கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.