அதிராம்பட்டினம் நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு -கிராம மக்கள் போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியாக இருந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு 16 ஆம் தேதி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும், நகராட்சியை ஒட்டியுள்ள மகிழங்கோட்டை, ஏரிப்புறக்கரை, தொக்காலிக்காடு, மழவேனிற்காடு, நரசிங்கபுரம் ஆகிய பஞ்சாயத்துகளை இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதற்கு ஆரம்பம் முதல் ஐந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை ஐந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், நகராட்சியுடன் பஞ்சாயத்துகளை இணைத்தால், அனைத்து வரிகளும் 10 மடங்கு அதிகரிக்கும், கால்நடைகள் வளர்ப்பு படிப்படியாக தடுக்கப்படும், மத்திய, மாநில அரசின் விவசாய மானியம் தடைபடும். குடிநீர் கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிக்கும். கிராமப்புற வீடு கட்டும் திட்டம் கிடைக்காது. வீட்டுமனை அங்கீகார கட்டணம் பலமடங்கு அதிகரிக்கும். என்.ஆர்.சி.சி நிதி நிறுத்தப்படும் என்பதாலும், அதிராம்பட்டினம் நகராட்சியில் பல பகுதிகளில், கழிவு நீர் வாய்க்கால், சாலைகள், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத நிலையில், எங்கள் கிராமும் இது போன்ற பாதிக்கப்படும் என்பதால், திட்டத்தை கைவிட வேண்டும் என முழக்கமிட்டனர். மேலும், போராட்டத்திற்கு பிறகும் நகராட்சியுடன் ஐந்து கிராமங்களை இணைக்க திட்டமிட்டால், உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்து கலைந்து சென்றனர். இதனால், நாகை – தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் காரணமாக நகராட்சி அலுவலகத்தை பூட்டிக்கொண்டு அலுவலர்கள் உள்ளே இருந்தனர்.