வீடுகளில் கருப்பு கொடியேற்றி கிராம மக்கள் போராட்டம் !

வீடுகளில் கருப்பு கொடியேற்றி கிராம மக்கள் போராட்டம் !

கருப்புகொடி

கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வீடுகளில் கருப்பு கொடியேற்றி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் கிராமம் கோமதி நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தெரு விளக்கு, கழிவுநீர் வாறுகால், மின் விளக்கு என எந்தவித அடிப்படை வசதிகளும் முழுமையாக நிறைவேற்றி தரப்படவில்லை. இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கோமதி நகர் பகுதியில் உள்ள அரசு ஊழியர் குடியிருக்கும் பகுதிகளுக்கு மட்டும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. மற்ற பகுதியில் உள்ள தெருக்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படவில்லை. இந்நிலையில், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து நேற்று கோமதி நகர் பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் செல்போனில் ஊராட்சி தலைவரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர், கோமதிநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனை அப்பகுதி மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். விரைவில் இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உரிய ஏற்பாடுகள் ெசய்வதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில், தற்காலிகமாக வீடுகளில் கட்டியுள்ள கருப்பு கொடிகளை அகற்றுகிறோம். நிதி ஒதுக்கீடு மற்றும் பணிகள் குறித்து யூனியன் ஆணையாளர் உறுதி அளிக்க வேண்டும். இல்லையேல், வருகிற மார்ச் 11-ந்தேதி யூனியன் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்து கருப்பு கொடிகளை அகற்றி போராட்டத்தை கைவிட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Tags

Next Story