கிராமமக்கள் திடீர் சாலை மறியல்

100 நாள் வேலை, பணிதள பொறுப்பாளரை பணிநீக்கம் செய்ததை கண்டித்து கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசலூர் கிராமத்தில் நடைபெறும் 100 நாள் வேலைத்திட்ட பணிதள பொறுப்பாளராக அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவர் இருந்து வந்தார்.

இந்நிலையில் இவர் மீது அடிக்கடி புகார் வரப்பெற்றதாக கூறி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தோனியம்மாளை தற்காலிக பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. அந்தோணியம்மாள் முறையாக பணியாற்றியதாகவும், அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் வேண்டுமென்றே அதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும்,

அவரை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் அரசலூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு அவ்வழியே வந்த அரசு நகர பேருந்தை சிறை பிடித்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரமாக நடத்திய மறியலை கைவிட்டு பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags

Next Story