கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
கரூர் அருகே மஞ்ச நாயக்கன்பட்டியில் மின் பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல். கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. குறிப்பாக மஞ்ச நாயக்கன்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின்சாரத்தை வெள்ளியணை துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக மின்பாதைகள் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த மின் பாதைகள் குறுகிய சாலை வழியாக அமைக்கப்படுவதால், ஊராட்சி பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதற்கும், விவசாய உபகரணங்களை கொண்டு செல்வதற்கும் இடையூறாக உள்ளதாகவும், சில நேரங்களில் மின் கசிவு ஏற்படுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி மின் பாதையை மாற்று பாதையில் அமைக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று கரூர்- கடவூர் செல்லும் சாலையில், மஞ்ச நாயக்கன்பட்டி நால் ரோட்டில், கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மின்பாதை அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்த ஏற்பாடு செய் வதாகவும், அதனால் மறியல் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் மின் பாதை அமைப்பதை நிறுத்தினால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தது. இதனால், காவல்துறையினர் பொதுமக்களிடம் தற்போது நீங்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்ய நேரிடும் என எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியலை கை விட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.