விழுப்புரம் : அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த விளக்க பிரசாரம்
அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும், ஓய்வூதியத்திற்கு ஒப்பந்தப்பலன், அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், 1.4.2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்தோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், வாரிசு அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19-ந் தேதி அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
இதையொட்டி விழுப்புரம் புதிய பஸ் நிலையம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் குறித்து மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விளக்க பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ரகோத்தமன், மறுமலர்ச்சி தொழிற்சங்க தலைவர் ரவி, ஐ.என்.டி.யு.சி. சங்க பொதுச்செயலாளர் முருகானந்தம், அறிவர் அம்பேத்கர் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.