விழுப்புரம் கலெக்டர் பழனி நேரில் ஆய்வு
ஆய்வு செய்த ஆட்சியர்
விழுப்புரம் நகரில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பூந்தமல்லி தெருவில், ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில், 120 மீட்டர் நீளத்திற்கு புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை, கலெக்டர் பழனி நேற்று காலை நேரில் பார்வையிட்டு,
சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ காலனி மெயின் ரோட்டில், பாதாள சாக்கடை அமைக்கும் பணியின்போது, சேதமடைந்த சாலையினை சீரமைப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்தார். இதனையடுத்து, விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பூங்காவில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும்,
விளையாட்டு மையம் மற்றும் சிறுவர்களுக்கான பூங்காவை பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தி, விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ., லட்சுமணன், விழுப்புரம் நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.