விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் நாளை மறுநாள் மகா சிவராத்திரி விழா
லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்.
விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் நாளை மறுநாள் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்.
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரசித்தி பெற்ற பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு 1008 சங்குஸ்தாபனம் பூஜை ஹோமம், பகல் 12 மணிக்கு பூர்ணாகுதி, மாலை 4 மணிக்கு பிரதோஷ பூஜை, 6 மணிக்கு முதல்கால பூஜை, இரவு 9 மணிக்கு 2-ம் கால பூஜை, 11 மணிக்கு 3-ம் கால பூஜை, 1008 சங்காபிஷேகமும், 9-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜையும், 5 மணிக்கு சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவின் போது பிரதோஷ பேரவை சார்பில் லட்டுகள் தயாரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர். அதுபோல் இந்த ஆண் டும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 40 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது. இதற்காக சர்க்கரை, கடலை பருப்பு, நெய், முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை கொண்டு லட்டுகள் தயார் செய்யும் பணியில் பிரதோஷ பேரவையினர் மற்றும் சமையல் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த லட்டுகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டதும் நாளை மறுநாள் மகா சிவராத்திரியன்று கைலாசநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.
Next Story