விழுப்புரம் கோட்டம்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
புனித வெள்ளி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி, கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கு 660 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
புனித வெள்ளி மற்றும் வார இறுதி விடுமுறை நாள்களையொட்டி, கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கு 3 நாள்களில் 660 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் இயக்கவுள்ளது.
இதுகுறித்து இக்கழகத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புனித வெள்ளி மற்றும் வார இறுதி விடுமுறை நாள்களையொட்டி, பயணிகளின் புழக்கம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 28, 29,30 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்ககம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய நகரங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்வார்கள் என்பதால், மூன்று நாள்களில் 660 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
எனவே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் மார்ச் 28ஆம் தேதி வழக்கமாக இயக்கப்படுவதை காட்டிலும் கூடுதலாக 240, மார்ச் 29ஆம் தேதி 180, மார்ச் 30ஆம் தேதி 240 என மொத்தமாக 660 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் அடர்வு குறையும் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும்,சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் தேவையான அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.