விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவு ரத்து !
ரயில் பகுதியளவு ரத்து
திருப்பதி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, விழுப்புரம்- திருப்பதி விரைவு ரயில் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் சேவையில் ஏற்கெனவே மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் முழுமையான ரயில் சேவை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பகுதியளவில் ரயில் சேவை ரத்து அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16854) காட்பாடி-திருப்பதி இடையே ஏப்ரல் 23}ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
எதிர்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி-விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண். 16853) திருப்பதி-காட்பாடி இடையே ஏப்ரல் 23ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.30 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என தெரிவித்துள்ளார்.