காஞ்சி அரசு மருத்துவமனையில் தேர்தல் நடத்தை விதிமீறல்

காஞ்சி அரசு மருத்துவமனையில் தேர்தல் நடத்தை விதிமீறல்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பெயர் எழுதப்பட்டுள்ள பெயர் பலகை மற்றும் கல்வெட்டு மறைக்கப்படாமல் உள்ளது.


காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பெயர் எழுதப்பட்டுள்ள பெயர் பலகை மற்றும் கல்வெட்டு மறைக்கப்படாமல் உள்ளது.

லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 16ல் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து 4 வாரமாகிறது. வரும் 19ல் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பொதுமக்கள் அதிகளவு வந்து செல்லும், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேர்தல் நடத்தை விதிகள் காற்றில் பறப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள எம்.ஆர்.ஐ., மற்றும் சி.டி.ஸ்கேன் கட்டடத்தில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பெயர் எழுதப்பட்டுள்ள பெயர் பலகை மற்றும் கல்வெட்டு மறைக்கப்படாமல் உள்ளது. அதேபோல, கொரோனா நோயாளிகளுக்கான புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மைய கட்டடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பெயர் உள்ள கல்வெட்டுகள் மறைக்கப்படாமல் உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சுவர் விளம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் படம் மறைக்கப்படாமல் உள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மைய சுவரிலும், கல்வெட்டிலும் உள்ள தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பெயர் மறைக்கப்படாமல் உள்ளது. குழந்தைகள் நல புறநோயாளிகள் பிரிவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அ.தி.முக.., அமைச்சர் சின்னையா, முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன், அ.தி.மு.க., எம்.பி., மரகதம் உள்ளிட்டோர் பெயர் உள்ள கல்வெட்டுகளும் மறைக்கப்படாமல் உள்ளது. இதனால், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரவில்லையா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புள்ளனர்.

Tags

Next Story