தேர்தல் விதிமுறை மீறல் - 33 பறக்கும் படைகள் துவக்கம்
ஆட்சியர் பிருந்தா தேவி
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ள தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவதை கண்காணிக்கவும், விதி முறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிருந்தாதேவி தலைமையில் மாவட்டம் முழுவதும் 33 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளன.
அதே போன்று 33 நிலை கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் முதல் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக தீவிர வாகன சோதனை நடந்தது. அதன்படி சேலம் அம்மாபேட்டை, மரவனேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர்.