கருப்படிதட்டடை ஊராட்சியில் தேர்தல் நடத்தை விதிமீறல்
சுவரில் அகற்றப்படாமல் உள்ள திமுக போஸ்டர்
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ல் நடக்கிறது. இதுகுறித்து அறிவிப்பு வெளியான மார்ச் 16ல் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், காஞ்சிபுரம் கலெக்டருமான கலைச்செல்வி, அரசு மற்றும் பொது இடங்களில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கவும்,
அரசியல் கட்சியினரின் கொடிகம்பங்களை அகற்றி, கல்வெட்டுகளை மறைக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நகர்ப்புற, உள்ளாட்சிகளில் உள்ள தேர்தல் அலுவலர்கள் சுவர் விளம்பரங்களை அழித்தும்,
கட்சி கொடிகம்பங்களையும் அகற்றி, கல்வெட்டுகளை மறைத்துள்ளனர். இந்நிலையில், தேர்தலுக்கு ஒன்பது நாட்ளே உள்ள நிலையில், காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சியில் தேர்தல் நடத்தை விதிகள் காற்றில் பறப்பாக புகார் எழுந்துள்ளது. ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சுபேட்டையில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் அ.தி.மு.க., கொடி பறந்து கொண்டிருக்கிறது. இதே பகுதியில் உள்ள ஊராட்சி நுாலகத்தில், அமைச்சர் அன்பரசன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மறைக்கப்படவில்லை.
அதேபோல, வேளாண்மை துறை, விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கிடங்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மறைக்கப்படவில்லை. வீட்டு சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள தி.மு.க., போஸ்டர் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், ஊரக பகுதிகளுக்கான தேர்தல் அலுவலர்கள் கிராமப்புறங்களில், தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.