விஐபி தொகுதியான விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொது தேர்தல் களைகட்டி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகங்களை வகுத்து, தகுதியான வேட்பாளர்களை களத்தில் இறக்கி வருகின்றன. அந்த வகையில், பிரபலங்கள் களம் காணும் தொகுதியாக 'விருதுநகர்' நாடாளுமன்ற தொகுதி அமைந்துள்ளது.விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியை சந்திக்கிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தற்போதைய எம்.பி. மாணிக்கம்தாகூருக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.
அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதி, கூட்டணி கட்சியான தேமுதிக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக கட்சியின் நிறுவனரான மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் வேட்பாளராக களம் காண்கிறார். கட்சி தலைவரின் மகன் தொகுதியில் நிற்பதால் வெற்றி உறுதி என்ற உற்சாகத்தில் தேமுதிக கட்சியினர் சுறுசுறுப்படைந்துள்ளனர்.மூன்றாவது அணியாக பாஜக கட்சியும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறது.
விருதுநகர் மாவட்ட செயலாளரின் சகோதரர் ஜவஹர், பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கும் பேராசியர் சீனிவாசன் ஆகிய இருவரும் சீட்டுக்காக கடுமையான முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் பாஜக கட்சியினர் யாருமே நினைத்துக்கூட பார்க்காத வகையில், விருதுநகர் தொகுதி நடிகர் சரத்குமாரின் மனைவியும், பிரபல நடிகையுமான ராதிகாவிற்கு வழங்கப்பட்டது. நடிகை ராதிகா மிகவும் பிரபலமானவராக இருந்தாலும், இவருக்கும் விருதுநகர் தொகுதிக்கும் என்ன தொடர்பு, நேற்று வரை எதிர் அரசியல் செய்து வந்தவரும், சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் செய்து வந்த நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்ட மறு நாளே அவரது மனைவிக்கு சீட் கொடுக்கப்பட்டு இருப்பதையும் பாஜக கட்சியினரே வியப்பாக பார்ப்பதுடன் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் சரத்குமாருக்கு என்று பெரிய வாக்கு வங்கி இல்லாதது, வெளியூர்காரர், தொகுதிக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாதவரை பாஜக கட்சி வேட்பாளராக நிறுத்தியிருப்பது ஏன் என்று பாஜக கட்சியினரே குழப்பத்தில் உள்ளனர். எது எப்படியானாலும், விருதுநகர் தொகுதி அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கக்கூடிய 'விஐபி' தொகுதியாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.