பிரச்சாரத்தை தொடங்கிய விருதுநகர் பாஜகவினர்

மக்களவை தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்ட பாஜகவினர் இரவோடு இரவாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நிர்வாகிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் முதல் பிரச்சாரத்தை நேற்று இரவு 9:30 மணிக்கு பாஜகவின் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் விருதுநகர் மெயின் பஜாரில் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அனுமதி இல்லாமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு மாவட்ட காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட பாஜக தலைவர் பாண்டுரங்கன் அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் பாஜகவின் தேர்தல் துண்டு பிரசுரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து அவர் தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் ஆகியோருக்கு பாஜகவின் தேர்தல் துண்டு பிரசுரத்தை விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் பாஜகவின் ஆதரவு கோஷங்களை எழுப்பியும் கட்சியின் சின்னமான தாமரை சின்னத்துடன் அவர்களுக்குள்ளாகவே வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட பாஜகவின் தேர்தல் துண்டு பிரசுரத்தில் வளர்ச்சியை நோக்கி விருதுநகர் என்றும் பிரதமர் மோடியின் படமும் பாஜகவின் சின்னமான தாமரைக்கு வாக்களியுங்கள். தேர்தல் நாள் 19. 4 .2024 என குறிப்பிடப்பட்டுள்ளது. விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் யார் என்று அக்கட்சி தலைமை அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை பாஜக வினர் தொடங்கியுள்ளது மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு பேசு பொருளாகவும் மாறியுள்ளது.

Tags

Next Story