மூத்த வாக்காளர்களுக்கு ஆட்சியர் மரியாதை
விருதுநகர் மாவட்டம் அழகாபுரி கிராமத்தில் மூத்த வாக்காளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலருமான மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில்: அதிக முறை ஜனநாயக கடைமையாற்றிய மூத்த குடிமக்களாகிய உங்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், தற்போது வாக்களிப்பதில் உள்ள நடைமுறைகள் குறித்தும், வாக்குச்சாவடி மையங்களில் மூத்த குடிமக்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்தும் விளக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். மக்களாட்சி தத்துவத்தில், பிரதிநிதித்துவம் மிக முக்கியமானது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உள்ளிட்ட எந்த வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் வாக்களிப்பதின் அவசியம்; குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மூத்த குடிமக்களாகிய நீங்கள் முதல் வாக்கினை பதிவு செய்த போது இருந்த ஆர்வத்தோடு தற்போதும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள், சக்கர நாட்காலி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள 85 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று தங்களுக்கு உரிய வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, தாங்கள் தவறாமல் வாக்களித்து மற்ற வாக்காளர்களுக்கு ஒரு உந்துகோலாக அமைய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார். தொடர்ந்து, அழகாபுரி கிராமத்தில், கிராம ஊராட்சி மன்ற அலுவலகம், நியாய விலைக்கடை, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெற்று வாக்களிக்க கூடாது என்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டு வில்லைகளை (sticker) ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வகை இரசீதுகளில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு முத்திரையிடும் பணியினை தொடங்கி வைத்தார்.