விருதுநகர் மாவட்டத்தை மேம்படுத்த ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம்

மாவட்ட அளவில் துறைச் சாரந்த அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம்.

விருதுநகர் மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக வட்டார மேம்பாட்டு உத்திகள் தயாரிப்பு செய்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கத்தை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, வட்டார மேம்பாட்டு உத்திகள் தயாரிப்பது தொடர்பாக விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த மாவட்டங்களின் 12 வட்டாரங்களுக்கு வளர்ச்சி திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட ஏதுவாக மாவட்ட அளவிலான துறை சாரந்த அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சியர், “மாநில அளவில் பல்வேறு வளர்ச்சி குறியீடுகளில் பின் தங்கியுள்ள 50 வட்டாரங்களை தேர்ந்தெடுத்து அரசின் பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து வாழ்வாதார குறியீட்டினை உயர்த்தும் நோக்குடன் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 வட்டாரங்களில் திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரம் வளர்ச்சி குறியீட்டில் பின்தங்கிய வட்டாரமாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் விருதுநகர் மண்டலத்தில் உள்ள விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டத்தைச் சேர்ந்த 12 வட்டாரங்கள் பின்தங்கிய வட்டாரங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் என்பது உலக அளவில் இருக்கக்கூடிய ஒரு திட்ட மாதிரி. எப்போதுமே இந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்கின்றபோது புவியியல் அமைப்புகளுக்கு இடையே ஒத்த வளர்ச்சி விகிதம் என்பது எப்போதுமே அமையாது. தமிழ்நாட்டினுடைய மனித வளர்ச்சி குறியீடு(Human Development Index) ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்டத்தினுள்ள பகுதிகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. அந்தந்த பகுதியினுடைய தொழில் வளம், அங்கு இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகள், அங்கு இருக்கக்கூடிய மனித வள மேம்பாடு வாய்ப்புகள் இவற்றையெல்லாம் பொறுத்து தான் அமையும்.

எப்பொழுதுமே நம்முடைய வளங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற வளர்ந்த நாடாக இருந்தாலும், வளரக்கூடிய நாடாக இருந்தாலும் அல்லது மிகவும் பின்தங்கிய வளர்ச்சி இருக்கக் கூடிய உலக நாடுகள் எதுவாக இருந்தாலும் நமக்கான வளங்களை பயன்படுத்தி இந்த பிராந்திய வேறுபாடுகளை(Regional Disparities) எப்படி போக்குவது என்பது குறித்தும், உலக அளவில் வளர்ச்சியை எப்படி உறுதி செய்வது என்பது குறித்தும் விவாதம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.

அதில் இப்பொழுது தமிழ்நாட்டில் 388 வட்டாரங்களில் 15 சதவீதமான 50 வட்டாரங்களை தேர்ந்தெடுத்து, அதற்கென்று நோக்கமாக திட்டத்தை தயாரித்து, குறைவான வளங்களை பயன்படுத்தி அதிகமான மக்களுக்கு நன்மைகள் கிடைக்கக்கூடிய அளவில் திட்டங்களை தீட்டுவது. அங்கு இருக்கக்கூடிய வளங்களை பயன்படுத்தி . அதன் அடிப்படையில் பல்வேறு வளர்ச்சித்துறைகளை ஒருங்கிணைத்து மிக தெளிவாக திட்டமிட வேண்டும். அந்தப் பகுதிகளுக்கு தேவையான பொதுவான திட்டங்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியலிட்டு செய்யும் போது, மற்ற வளர்ச்சிகளும் ஏற்படும். ஒவ்வொரு வட்டாரத்திலும் இருக்கக்கூடிய திட்டமிடலை வைத்து புதிதாக ஒரு திட்ட வடிவமைப்பை உருவாக்குகின்ற போது, இந்த திட்ட அடிப்படையில் 2026 மற்றும் 2027 ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்ற வகையில் உருவாக்குகிறார்கள்.

எனவே, அலுவலர்கள், இதனுடைய முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு இங்கு தரக்கூடிய தகவல்களை சிறப்பாக பெற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் உங்களுடைய குழுவிற்கும் இதனை எடுத்துக் கூறி இதனை முறையாக செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.

Tags

Next Story