அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டம் குறித்த செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், ஆய்வு செய்து, மாணவ, மாணவியர்களிடையே வேலைவாய்ப்புகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசும்போது, தமிழக அரசு, மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.
இன்றைய வேலை வாய்ப்பு சந்தைகளில் அதிக வேலை வாய்ப்புகள் இருந்தும் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியாமல் போவதற்கு மிக முக்கியமான காரணம், வேலைக்கான தகுதியின்மை என்பதுதான். மாணவர்கள் தங்கள் படிப்பிற்கேற்ற வேலைகளை தேடும் போது, அதற்கான திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “நான் முதல்வன்” என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்கள் படிக்கின்ற படிப்பிற்கு ஏற்ற செயல்திறனை உருவாக்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இத்திட்டத்தில் மாணவர்கள் அனைவரும் இணைந்து தங்களுக்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கிராமப்புற மற்றும் பின் தங்கிய பகுதியிலிருந்து வரக்கூடிய மாணவர்கள் வெளியில் இருக்கக்கூடிய பல்வேறு வாய்ப்புகள் குறித்த அறியாமை உள்ளது. அதற்கான விழிப்ப்புணர்வு இருக்க வேண்டும். முதலில் என்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும் வாய்ப்புகளை தெரிந்து கொண்டு அதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமை வாய்ந்தவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் வாய்ப்புகள்இருக்கின்றன.
இந்திய அளவில் போட்டித்தேர்வு மூலமாக ஆண்டிற்கு ஏறத்தாழ 3 இலட்சம் வேலைவாய்ப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் பெரும்பானவர்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கிறார்கள். யு.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி பணிகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் தேவையான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் மூலம் வெற்றி பெறலாம். போட்டித்தேர்வுகளுக்காக சமூக ஊடகங்களில் எண்ணற்ற இலவச வகுப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டுத் தேர்வுகள் குறித்த அறியாமையை முதலில் மாணவர்கள் விலக்க வேண்டும். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, இலக்கிற்காக நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
படிப்பு, பொருளாதாரம், சமூக சூழல், குடும்ப சூழல், அறிவு உள்ளிட்டவைகளில் நம்மைவிட பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் கூட, நாம் நினைத்து கூட பார்க்க முடியாத தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.இதை புரிந்து கொண்டீர்கள் என்றால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்திலே மாணவர்கள் தங்களுக்கான செயல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அடிப்படை அறிவு மற்றும் தொடர்ச்சியான முயற்சியால் மட்டுமே வெற்றி பெற முடியும். எனவே மாணவர்கள் தங்களுக்கான திறமைகளை வளர்த்துக் கொண்டு நல்ல வேலைவாய்ப்பினை பெற்று தங்கள் குடும்பத்தினையும், இந்த சமுதாயத்தையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை மாணவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.