10 பேர் பலியான பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இருவர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமுத்தேவன் பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பான வழக்கில், பட்டாசு ஆலையின் மேலாளர் மற்றும் போர்மேனை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகளில் 150 க்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேன்சி ரக பட்டாசுகளின் மருந்துகளின் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் பத்து தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர் மேலும் 4க்கு மேற்பட்ட தொழிலாளர் கள் படுகாயத்துடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பட்டாசு வெடி விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ் மற்றும் ஆலை போர் மேன் சுரேஷ் குமார் மற்றும் ஆலையின் மேலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமார் பட்டாசு ஆலையின் மேலாளர் ஜெயபால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலை மறைவாக உள்ள பட்டாசு ஆலையின் உரிமையாளர் விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.