அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
மாணவர்களை வரவேற்ற ஆட்சியர் 
விருதுநகரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். மேலும் பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட 47 குழந்தைகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தியும், பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியும் வருகிறது. இத்திட்டங்களை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை தொடர்ந்து செய்து வருகிறது.

அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு பேரணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் கல்வியில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, உயர்கல்வி பயிலும்; மாணவிகளுக்காக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை, வாசிப்புத் திறனை வளர்க்க தேன் சிட்டு எனும் சிறார் இதழ், வினாடி வினா போட்டிகள், சிறார் திரைப்பட விழாக்கள், இலக்கிய மன்ற செயல்பாடுகள், வானவில் மன்றம், கலைத்திருவிழா மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா, இல்லம் தேடி கல்வி, உயர்கல்விக்கு வழிகாட்டும் நான் முதல்வன் திட்டம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தனிச்சிறப்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை எடுத்துக் கூறியும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மூலமும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே அனைவரும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கை பெற்று பயின்று, நல்லதொரு எதிர்காலத்தை திட்டமிட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags

Next Story