கபடி போட்டியில் விருதுநகர் அணி முதல் பரிசு

மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் விருதுநகர் அணியினர் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் விருதுநகர் அணியினர் முதல் பரிசை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி வெற்றி கோப்பையையும், ரொக்க பரிசுகளையும் வழங்கி பாராட்டினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரத்தில் முகவூர் நண்பர்கள் குழு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி 15 வது ஆண்டாக நடைபெற்றது.

இன்று பகலில் தொடங்கிய பெண்களுக்கான போட்டிகளில் தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இருந்து 15 அணிகளை சேர்ந்த 180 பேர் கலந்து கொண்டனர். விருதுநகரை சேர்ந்த அக்குவா அணியினரும் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த வியாசா கல்லூரி மாணவிகளும் அரை இறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியை முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்து வீரர்களை அறிமுகம் செய்தார்.

லீக் முறையில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதியில் 34 புள்ளிகள் பெற்று விருதுநகர் அக்குவா அணிகள் முதலிடத்தையும், 13 புள்ளிகளுடன் கல்லூரி மாணவிகள் அணியினர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி வெற்றி கோப்பையையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கி பாராட்டினார். மேலும் போட்டியில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய வீராங்கனைகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story