காவல் ஆய்வாளர் வீட்டில் திருடர்கள் கைவரிசை - தங்க நகைகள், பணம் கொள்ளை
விருதுநகர் அருகே குல்லூர்சந்தை கிராமத்தை சேர்ந்தவர் கவிதா(வயது49). இவர் விருதுநகரில் உள்ள குழந்தைகள் தடுப்பு பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகாத நிலையில் சிவதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவரும் விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில்,நேற்று வழக்கம்போல் கவிதாவும் அவரது மகளும் வேலைக்கு சென்றுள்ளனர். கவிதா வேலையை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்பி உள்ளார். அப்பொழுது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபொழுது பீரோவில் இருந்த 17 1/2 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக சூலக்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும் பட்டபகலில் சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.