வாக்களிப்பு நூதன விழிப்புணர்வு

பாபநாசம் பகுதியில் தேர்தலில் 100% வாக்குப்பதிவுக்காக திருமண அழைப்பிதழ் போல் நோட்டீஸ் அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து நூதன பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்போம் என்ற அடிப்படையில் திருமண பத்திரிகை போன்று ஒரு வினோதமான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் திருவிழா அழைப்பிதழ் அன்புடையீர் வணக்கம். நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2055 சித்திரை 6ஆம் நாள் 19.04. 2024 வெள்ளிக்கிழமை நலம் தரும் நன்னாளில் காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் திருவிழா தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்டிட அன்புடன் அழைக்கின்றோம் தங்கள் அன்புள்ள எ.பி.மகாபாரதி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சி தலைவர் மயிலாடுதுறை .அவ்வண்ணமே அழைக்கும் மணிமேகலை கூடுதல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகிருஷ்ணன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தஞ்சாவூர், மணிகண்டன் வட்டாட்சியர் பாபநாசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் வரதட்சணை வாங்குவதும் பெறுவதும் குற்றம் என்ற அடிப்படையில் அன்பளிப்பு (ஓட்டுக்கு, பணம் பரிசுப் பொருட்கள்), பெறுவதும் அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதை வாங்கி படிக்கும் மக்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தில் எந்த வேலையாக இருந்தாலும் சரி தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளதாக தெரிவித்தனர். பாபநாசம் பேரூராட்சி பகுதியில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் வீடு வீடாக சென்று 100% வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களிடம் தாம்பூலம் தட்டில் வைத்து தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கினார்கள்.

தொடர்ந்து குடும்பத்தில் ஓட்டு உரிமை உள்ளவர்கள் குடும்பத்துடன் வந்து ஓட்டு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர் மேலும் நாடாளுமன்ற பொது தேர்தல் ஏப்ரல் 19 2024 என் ஓட்டு என் உரிமை என் வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை தேர்தல் அதிகாரிகள் ஆட்டோ மோட்டார் சைக்கிள் வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் உடன் வருவாய் ஆய்வாளர்கள் சுந்தரேசன், ராஜதேவி, கமலி, மாலினி ,கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் ,பிரபு, தமிழ்வேந்தன், காயத்ரி, சப் இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன், காவலர் நாராயணதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story