ஸ்கேட்டிங், அக்குவா செஸ் மூலம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை நோக்கி பல்வேறு விழிப்புணர்வுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை நோக்கி பல்வேறு விழிப்புணர்வுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று 100% வாக்குப்பதிவினை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் ஜெயசித்ரா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியரும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி, எஸ் பி சண்முகம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி மாணவ , மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் 100% வாக்குப்பதிவு மாவட்டத்தில் நடைபெறும் வகையில் நடனமாடி ஸ்கேட்டிங் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதே போல் நீச்சல் பயிற்சியாளர் ஆனந்த் தலைமையில் , நூற்றுக்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் நீரில் செஸ் விளையாடி 100 சதவீத வாக்குப்பதிவை மேற்கொள்ள வலியுறுத்தி உறுதி மொழியும் வாசித்து ஏற்றனர். இந்நிகழ்ச்சி குறித்து விளையாட்டு அலுவலர் ஜெயசித்ரா கூறுகையில், முதல் தலைமுறை வாக்காளர்களை முன்னிறுத்தி இதுபோன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி 100% வாக்குப்பதிவு என்ற இலக்கை நோக்கி செல்வதாகவும், விளையாட்டு மைதானத்துக்கு வரும் அனைவருக்கும் தேர்தல் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
Next Story