வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி வழி குலுக்கல் முறையில் தோ்வு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி வழி குலுக்கல் முறையில் தோ்வு

வாக்குப் பதிவு இயந்திரங்கள்

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 1665 வாக்குச்சாவடிகளுக்கு 5,985 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெறுகிறது.
திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் முன்னிலையில், தோ்தல் பாா்வையாளா் தினேஷ்குமாா் மேற்பாா்வையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி வழி குலுக்கல் முறையில் தோ்வு செய்து வாக்குச்சாவடிக்கு அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்படி, ஸ்ரீரங்கம் தொகுதியின் 339 வாக்குச் சாவடிகளுக்கு 1,218 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 406 கட்டுப்பாட்டுக் கருவிகள், 440 விவிபேட் (வாக்காளா் தாம் வாக்களித்ததை உறுதி செய்யும் படிவம் வரும் இயந்திரம்) பயன்படுத்தப்படவுள்ளன. திருச்சி மேற்கு தொகுதியின் 270 வாக்குச் சாவடிகளுக்கு 972 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 324 கட்டுப்பாட்டுக் கருவிகள், 351 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள 255 வாக்குச் சாவடிகளில் 918 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 306 கட்டுப்பாட்டுக் கருவிகள், 331 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. திருவெறும்பூா் தொகுதியில் உள்ள 296 வாக்குச் சாவடிகளில் 1,065 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 355 கட்டுப்பாட்டுக் கருவிகள், 384 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கந்தா்வக்கோட்டை தொகுதியில் உள்ள 239 வாக்குச் சாவடிகளில் 858 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டுக் கருவிகள், 310 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. புதுக்கோட்டை தொகுதியில் உள்ள 266 வாக்குச் சாவடிகளில் 954 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 318 கட்டுப்பாட்டுக் கருவிகள், 344 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. திருச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தமாக 1,665 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றுக்கு 5,985 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1995 கட்டுப்பாட்டுக் கருவிகள், 2,160 விவிபேட் இயந்திரங்கள் கணினி வழி குலுக்கல் முறையில் தோ்வு செய்து அனுப்பி வைக்கப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை இந்தப் பணிகளை பாா்வையிட்ட பிறகு, செய்தியாளா்களிடம் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் எண்ணிக்கையிலேயே இயந்திரங்கள் அனுப்பப்படுகின்றன. இயந்திரங்களில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக மாற்று இயந்திரம் வழங்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குச்சாவடி வாரியாக தோ்வு செய்து அனுப்பப்படுகிறது. மேலும், இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் உள்ளிட்டவை பொருத்தும் பணியும் நடைபெறுகிறது என்றாா்

Tags

Next Story