ஒன்றிய அரசைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் வி.தொ.ச ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோடிக்கணக்கான ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்களை வெளியேற்றி, திட்டத்தை சீர்குலைக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசைக் கண்டித்தும், மூன்று மாத காலமாக நிலுவையில் உள்ள வேலை சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயத் தொழிலாளர் சங்கம் பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் எஸ். தமிழ்ச்செல்வன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில், மாநிலச் செயலாளர்கள் வி.மாரியப்பன், கே.பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, மாவட்டத் தலைவர் ஆர். பிரதீப் ராஜ்குமார், மாவட்டப் பொருளாளர் சி.நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் கே.பெஞ்சமின் (பட்டுக்கோட்டை), ஏ.வி.குமாரசாமி (பேராவூரணி), இளங்கோ (சேதுபாவாசத்திரம்), ஏ.வி.பஞ்சாட்சரம் (மதுக்கூர்) மற்றும் உலகநாதன், சரோஜா, மகேஸ்வரி, சாமிநாதன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், விவசாயத் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், "100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதை தடுத்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு 100 நாள் வேலைக்கான நிதியை குறைப்பதை கைவிட்டு, தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வேலை அட்டையில் ஆதார் இணைப்புடன் கூடிய பரிவர்த்தனை முறையை திரும்ப பெற வேண்டும். வேலை அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். மூன்று மாதமாக நிலுவையில் உள்ள சம்பள பாக்கி வழங்க வேண்டும்" என வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பட்டுக்கோட்டை, திருவோணம், பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மத்திய அரசின் தேசிய வேலை உறுதி திட்டத்திற்கு எதிரான நகல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

Tags

Next Story