அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி காத்திருப்பு போராட்டம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி காத்திருப்பு போராட்டம்
காத்திருப்பு போராட்டம்
பேராவூரணி அருகே நடந்த காத்திருப்பு போராட்டம் வெற்றி. கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அலுவலர்கள் உறுதி ,

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூவாணம் ஊராட்சி பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு மற்றும் பூவாணம் ஊராட்சி கிராம பொதுமக்கள் சார்பில் பூவாணம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை காலை தொடங்கியது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் வழக்குரைஞர் வீ.கருப்பையா தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார், வி.ச. ஒன்றியப் பொருளாளர் பி.சத்தியசீலன், ஒன்றியக் குழு உறுப்பினர் நவநேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியக் குழு உறுப்பினருமான பி.சுப்பிரமணியன், மாதர் சங்கம் ஒன்றியச் செயலாளர் ஏ.மேனகா, மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் எஸ்.ஜெ. ராஜேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பூவாணம் ஊராட்சியில் குடிநீர், தெரு விளக்கு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மயானத்திற்கு செல்லும் சாலையை அமைத்து தர வேண்டும். பகுதிநேர அங்காடியை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நான்கு மாத காலமாக நிலுவையில் உள்ள 100 நாள் வேலைத்திட்ட சம்பளம் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்கு, கான்கிரீட் சாலை அமைத்து தர வேண்டும். குடிமனை மற்றும் குடிமனைப் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அரசு மருந்தகத்தை மேம்படுத்த வேண்டும்.

நூலக வசதி ஏற்படுத்த வேண்டும். ஸ்ரீ அக்னி காளியம்மன் திருக்கோவிலுக்கு செல்ல சாலை வசதி அமைத்து தரவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தி, வரும் 14 ஆம் தேதி பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, காலை 10 மணிக்கு தொடங்கிய காத்திருப்பு போராட்டம் பகல் 2 மணிக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story