முடிச்சூர் ஏரியிலிருந்து வீணாகும் தண்ணீர்

முடிச்சூர் ஏரியில் தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க, 'ஷட்டர்' அமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 112 ஏக்கர் பரப்பளவு உடையது. மழைக்காலத்தில் நிரம்பும் போது, மேற்கு பகுதியில் உள்ள மதகு வழியாக தண்ணீர் வெளியேறி, அருகேயுள்ள சிறிய ஏரிக்கு செல்லும்.மற்றொரு புறம், இந்த ஏரியை நம்பி விவசாயமும் நடந்து வந்தது. கடந்த 2014 - 2015ம் ஆண்டு, இந்த ஏரியை, 8 அடி ஆழத்திற்கு துார்வாரி ஆழப்படுத்தினர்.

இந்நிலையில், ஏரியின் மேற்கு பகுதியில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்ட போது, 20 சதவீத நீர்ப்பிடிப்பு பகுதி காலியானது. அப்போது, அங்கிருந்த மதகை உடைத்துவிட்டனர். அதற்கு பதிலாக, சிமென்ட் கால்வாய் அமைத்தனர். இதனால், ஏரியில் தேங்கும் தண்ணீர் இந்த கால்வாய் வழியாக வீணாக வெளியேறுகிறது. மழைக்காலத்தில், ஏரியில் இருந்து அதிகப்படியாக தண்ணீர் வெளியேறுவதால், கொம்மியம்மன் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட 10 நகர்களில் வெள்ளம் தேங்குகிறது.மற்றொரு புறம், ஏரியின் நீர்மட்டமும் குறைந்து, கோடை காலத்தில் முடிச்சூர், மண்ணிவாக்கம் ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. அதனால், முடிச்சூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க, 'ஷட்டர்' அமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள், தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story