தாழக்குடி ஏரியில் நீர் கசிவு - சீரமைக்க கோரிக்கை
கோட்டாட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி பகுதியில் வீரகேரளப்பன் ஏரி உள்ளது. இந்த ஏரியின் உபரி நீர் வெளியே போகும் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏரியின் மேற்கு பக்கச்சுவர் நீர் கசிவினால் பாதிக்கப்பட்டு நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் தாழக்குடி - ஆண்டித்தோப்பு சாலையில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த நீர் கசிவு அதிகமாகி உள்ளது. எனவே மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த இடங்களை நேரடியாக பார்வையிட்டு ஏரியினை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையடுத்து தாழக்குடி ஊர் பொதுமக்கள், விவசாய பெருமக்கள் சார்பாக பூதப்பாண்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் ,தற்போதைய பேரூராட்சி கவுன்சிலருமான ரோகினி அய்யப்பன் என்பவர் கோட்டாச்சியர் காளிஸ்வரியிடம் மனு கொடுத்தார். வட்டாச்சியர் கோலப்பன், தாழக்குடி முன்னாள் கவுன்சிலர் நாராயணபிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.