ஊட்டிக்கு குடிநீர் அணைகளில் நீர் மட்டம் குறைவு

ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நீர்மட்டம் குறைந்ததால், தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் சுமார் 1.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். 3000க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டிக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஊட்டி நகராட்சி மக்கள், தங்கும் விடுதிகளுக்கு பார்சன்ஸ் வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலா, தொட்டபெட்டா உள்பட 10 அணைகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பார்சன்ஸ் வேலி அணை மூலம் மட்டும் 80 சதவீத குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பார்சன்ஸ் வேலி அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

ஊட்டி பார்சன்ஸ் வேலி அணையின் மொத்த கொள்ளளவான 50 அடியில் 17 அடியாக நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் 35 சதவீதம் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 25 அடியாக நீர்மட்டம் இருந்தது. 23 அடி கொள்ளளவு கொண்ட மார்லிமந்து அணை நீர்மட்டம் 5 அடியாகவும், 35 அடி கொள்ளளவு கொண்ட கோரிசோலா அணை நீர்மட்டம் 6 அடியாகவும் குறைந்தது. 31 அடி கொள்ளளவு கொண்ட தொட்டபெட்டா அப்பர் அணையின் நீர்மட்டம் 15 அடியாக குறைந்து இருக்கிறது.

39 அடி டைகர்ஹில் அணையில் 20 அடியாக நீர்மட்டம் உள்ளது. கோடப்பமந்து அப்பர், தொட்டபெட்டா லோயர், கிளன்ராக் உள்ளிட்ட 5 சிறிய அணைகளில் ஓரளவு தண்ணீர் இருப்பு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் உறைபனி தாக்கம் நிலவியது. குளிர்காலத்தில் நீர்பனி, உறைபனி அதிகமாக காணப்பட்டது.

போதுமான அளவு மழை பெய்யவில்லை. இதனால் ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நீர்மட்டம் குறைந்து உள்ளது. மேலும் ஊட்டியில் தற்போது சமவெளி பகுதியில் போல கோடை வெயில் அதிகமாக உள்ளது.

இதனால் ஊட்டியில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் பார்சன்ஸ் வேலி உள்பட அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் ஒரு சில வார்டுகளில் தற்போது தண்ணீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோடை மழை கை கொடுக்காவிட்டால் ஊட்டியில் மே மாதம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளுக்காக தனியார் ஓட்டல்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்து உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து தண்ணீர் வினியோகிக்க வேண்டும் என்றும், அணைகளில் தண்ணீர் அதிக அளவில் உறிஞ்சும் அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை வனத்துறையினர் தீவிர படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் கூறுகையில்," ஊட்டி பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. வெயில் அதிகமாக அடிப்பதால் தற்போது பொதுமக்களுக்கு குடிநீர் அதிக அளவு தேவைப்படுவதால், அணையில் இருந்து வழக்கமாக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்படவில்லை. நகராட்சிக்கு சொந்தமான ஒரு லாரி மற்றும், வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள 3 லாரிகள் என தேவைப்படும் இடங்களுக்கு 4 லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது," என்றார்.

Tags

Next Story