கோடைகாலத்தில் குடிநீர் சீராக விநியோகிக்கணும் !
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், கோடைகாலத்தில் குடிநீர் விநியோகம் சீராக இருக்க வலியுறுத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு பின்னர் கண்காணிப்பு அலுவலர் சங்கர் கூறியதாவது:- பொதுமக்களின் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களை சென்று சேரும் வகையில் தொடங்கப்பட்ட "மக்களுடன் முதல்வர்" திட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் என 142 இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது முன்னுரிமை கொடுத்து விரைந்து தீர்வு காண வேண்டும்.
பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். கோடை காலத்தை கருத்தில் கொண்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற்கு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரூ.1 கோடியே 84 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.