யானைகள் நீர் அருந்த தண்ணீர் தொட்டி - வனத்துறையினர் நடவடிக்கை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்துக்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலை காப்புக்காட்டு பகுதி 24 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கும், ஒகேனக்கல் வனச்சரக்கத்திற்கும் இடையே அமைந்துள்ள பாலக்கோடு வனச்சரகம் மிகவும் அடர்ந்த காட்டு பகுதியாக அமைந்துள்ளது. இந்த காப்பு காட்டு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள், ஏராளமான மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த காப்பு காட்டை வனச்சரக அலுவலர் தலைமையில் 4 வனவர்கள், 20 வனக்காப்பாளர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட யானைகளை விரட்டும் தற்காலிக பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் பாலக்கோடு வனச்சரகம் கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. இந்த காப்பக்காட்டில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மரங்கள், செடி கொடிகள் காய்ந்து கருகிப் போய் உள்ளன. மேலும் இந்த பாலக்கோடு வனப்பகுதியில் ஓடும் சின்னாறும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளித்த இந்த வனப்பகுதி தற்போது பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில் மரங்கள் கருகி மிகவும் வரட்சியான பகுதியாக மாறிவிட்டது. இந்த காப்பு காட்டில் நிலவும் கடும் வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள், மான்கள் மற்றும் வனவிலங்குகள் அருகில் உள்ள விளைநிலங்கள் மற்றும் கிராமப் பகுதிக்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வப்போது காட்டு யானைகள் அருகில் உள்ள விலை நிலங்களுக்குள் புகுந்து மாமரங்கள், பலா மரங்கள் உள்ளிட்ட செடி கொடிகளைநாசம் செய்து வருகிறது. குறிப்பாக இந்த வனவிலங்குகள் தண்ணீர் இல்லாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது நிலவும் கடும் கோடை வெப்பத்தால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகும். இதனை கருத்தில் கொண்டு வனத்துறை சார்பில் பாலக்கோடு வனச்சரகத்துக்கு உட்பட்ட கேசர்குழி அணை அருகே சொக்கன்கொட்டாய் பகுதியில் 2 இடங்களிலும், பிக்கிலி மலை காப்பு காடு புளிப்பட்டி பகுதியில் ஒரு இடத்திலும், கோடுப்பட்டி காப்பு காட்டு பகுதியில் ஒரு இடத்திலும் பிரம்மாண்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தொட்டிகளுக்கு சோலார் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. சின்னாற்றில் நீர்ஆதாரம் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளது.இதன் காரணமாக பாலக்கோடு வனச் சரக்கத்துக்குட்பட்ட பகுதிகளில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் இந்த தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் குடித்து வருகின்றன. ஒரு சில இடங்களில் யானைகள் கூட்டமாக வந்து உற்சாக குளியலும் போட்டு வருகிறது. சின்னாற்றில் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள தற்காலிக குழிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரையும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பருகி வருகின்றன.
இந்த நிலையில் கோடையின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தருமபுரி மண்டல வன பாதுகாப்பு அலுவலர் பத்மா, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் ஆகியோர் உத்தரவின்படி பாலக்கோடு வனச்சரக அலுவலர் நடராஜன் தலைமையில் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொட்டிகளில் பற்றாக்குறை இல்லாமல் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் தற்காலிக குழிகளை தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வனச்சரக அலுவலர் நடராஜன் தெரிவித்துள்ளார்.