வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள்
தர்மபுரி, டிச. 15: வன விலங்குகளின் தண்ணீர் தேவைக்காக, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனச்சரகங்களில் 12 தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பல்லா நாயுடு தகவல். தர்மபுரி வனக் கோட்ட வன விலங்குகளுக்கு வன பகுதிகளில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரும் விதமாக, காலநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக் கல் திட்டத்தின் மூலம் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியைக் கண்டறிந்து அங்கு மூன்று தண்ணீர்த் தொட்டிகள் ரூ.19,35,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.
தொட்டிகளுக்கு சூரிய ஒளி மின்மோட்டார்கள் மூலமாக தண்ணீர் நிரப்பப்படுகிறது. தண்ணீர்த் தொட்டிகளுக்கு அருகே வன விலங்குகள் நடமாட்டம் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக மற்றும் வன விலங்குகளுக்கு எதிரான குற்றத்தை தடுக்கும் விதமாக தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன தண்ணீர்த் தொட்டிகளில் யானை, நரி, மயில், காட்டுப் பன்றிகள் மற்றும் இதர வனவிலங்குகள் நீர் அருந்தி வருவது அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளன. இதன் மூலம் தொட்டிகள் விலங்குகளுக்கு பயனுள்ளதாக இருப்பது தெரியவந்துள்ளது.
தர்மபுரி வன மாவட்டத்தில் வனத்துறை மூலம் வன உயிரினங்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் இருக்கும் விதமாக, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பயிர் சேதம், விவசாயம் பாதிக்கப்படாமல், மனித - விலங்கு மோதல் ஏற்படாமலும் தடுக்க முடியும். ஏற்கனவே வெவ்வேறு திட்டங்களின் கீழ் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வன சரகங்களில் 12 தண்ணீர்த் தொட்டிகள் கட்டப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாது வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.